×

சென்னை மாநகர காவல்துறை மூன்றாக பிரிப்பு தாம்பரம் மற்றும் ஆவடி ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரிகளாக 2 ஏடிஜிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:  சென்னை மாநகர காவல் துறையின் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பெரிய அளவில் சென்னை மாநகர் உள்ளதால், அதை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை காவல் துறை இரண்டாக பிரிக்கப்பட்டது. சென்னை புறநகர் என்ற பெயரில் ஐஜி அந்தஸ்தில் ஒரு புதிய கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. அவருக்கு கீழ் 2 துணை ஆணையர்கள் செயல்பட்டு வந்தனர். பின்னர் 2011ம் ஆண்டு ஜெயலலிதா, சென்னை மற்றும் புறநகர் கமிஷனர் அலுவலகங்களை ஒன்றாக இணைத்தார். சென்னை கமிஷனராக ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் நியமிக்கப்படுவார். சில நேரங்களில் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கமிஷனருக்கு கீழ், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மட்டும் ஐஜி அந்தஸ்தில் 2 கூடுதல் கமிஷனர்கள் (வடக்கு, தெற்கு) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ், டிஐஜி அந்தஸ்தில் 4 இணை கமிஷனர்கள், அவர்களுக்கு கீழ், 12 துணை கமிஷனர்கள், அவர்களுக்கு 48 உதவி கமிஷனர்கள் உள்ளனர். சென்னை மாநகர காவல்துறையை பொறுத்தவரை சென்னை வருவாய் மாவட்டத்தை தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது. தற்போது சென்னைக்குள் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிர்வாக காரணங்கள், காவல் எல்லை விரிவாக்கம் காரணமாக சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதில் போலீசாருக்கு சிக்கல் உள்ளது. எனவே, சென்னை மாநகர காவல்துறையை 3ஆக பிரித்து, மீண்டும் புறநகர் ஆணையரகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சென்னைக்கு புறநகரில் அமைந்துள்ள தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியும் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அறிவிப்புக்கு ஏற்ப காவல் துறையையும் பிரிக்கலாம் என்கிற கருத்து எழுந்துள்ளது. அதில், பழையபடி சென்னை காவல் ஆணையரகம் இயங்கும். அதற்கு ஏடிஜிபி அந்தஸ்தில் அதிகாரி இருப்பார். புறநகரில் தாம்பரத்திற்கு ஒரு ஏடிஜிபி அந்தஸ்திலும், ஆவடிக்கு ஏடிஜிபி அந்தஸ்திலும் கமிஷனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்றாக பிரிக்கப்பட்டு சென்னை கமிஷனராக சங்கர் ஜிவால் உள்ள நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி ரவியும், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரியாக (கமிஷனராக) நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி அபின் தினேஷ் மொடக் ஏடிஜிபி பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.   சென்னை காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளதால் மொத்தமுள்ள 14 காவல் மாவட்டங்களில் 5, 5, 4 என்கிற விகிதத்தில் பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம் என இருக்கும். அதன்படி சென்னை கமிஷனருக்கு கீழ் திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், புளியந்தோப்பு, பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களும், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் தாம்பரம், மவுண்ட், அடையாறு, பூந்தமல்லி, தி.நகர் ஆகிய காவல் மாவட்டங்களும், ஆவடி ஆணையரகத்தின் கீழ் அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் மாவட்டங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிர்வாக காரணங்கள், காவல் எல்லை விரிவாக்கம் காரணமாகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகவும் சென்னை காவல் துறை 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

The post சென்னை மாநகர காவல்துறை மூன்றாக பிரிப்பு தாம்பரம் மற்றும் ஆவடி ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரிகளாக 2 ஏடிஜிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram and ,Awadi Commission ,Chennai City Police ,Tamil Nadu Government ,Chennai ,Shankar Jiwal ,Chennai City ,of ,Separation ,Tambaram and Awadi Commission ,
× RELATED தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை...